இலங்கைக்குச் செல்லாதீர்; உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகாதீர்! – ரஜினியிடம் திருமாவளவன் வேண்டுகோள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

லைக்கா நிறுவனம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இப்போது நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைக்கா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்கவுள்ளார் என்கிற செய்திக்குறிப்பு லைக்கா நிறுவனத்தின் சார்பில் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேச வேண்டிய நேரத்தில், அதைத் திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிங்கள அரசுக்குத் துணைபோகும் பா.ஜ.கவின் அனுமதியோடு இந்த அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒரு விழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

லைக்கா நிறுவனம், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகின்ற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகின்றது. சிங்கள அரசுக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயற்படுத்த, எவ்வித நியாயமுமின்றி உறவுகள், உடைமைகள், உரிமைகளையும் இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகின்றது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கின்றது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *