நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்; புகையிரத கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எந்தவொரு சலுகையுமின்றி தங்களை அடிமைகளாக, கட்டாயப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் வேலை வாங்குவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகையிரத கடவை ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுமுறை எதுவுமின்றி நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரதக் கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்குமாறு கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று காலை புகையிரத கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் 72 புகையிரத கடவை ஊழியர்களே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாள் ஒன்றுக்கு 250 ரூபா போதுமா, நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய், நல்லாட்சி அரசே நாங்கள் அடிமைகளா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு தமிழ், சிங்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி, கடந்த இரு வாரங்களாக வடக்கு, கிழக்கு மாகாண புகையிரத கடவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *