சம்பந்தனுடன் கைகோக்க மஹிந்த தரப்பினர் ஆர்வம்! – நாமல் ஊடாக சமிக்ஞை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நெருங்கிய அரசியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அதன் ஒரு வெளிப்பாடாக சம்பந்தனின் கருத்தை வரவேற்கும் டுவிட்டர் செய்தி ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் எம்.பியினால் தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் அங்கு அந்நியோன்னியமாகப் பழகினர். ஒருவரை ஒருவர் மதித்து கருத்து வெளியிட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் இணைந்து செயற்படத் தயார் என சம்பந்தன் அங்கு பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

“எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர். இந்த நாடு என்றும் பிளவுபடக் கூடாது. எமது பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும். எனவே, அதனைப் புரிந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரியவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சம்பந்தன் அங்கு கூறியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கருத்தையே நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது உத்தியோகபூர்வ ‘டுவிட்டர்’ தளத்திலே தமிழில் வரவேற்றிருக்கின்றார்.

“கெளரவ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இந்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன்” என்றும், “ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மஹிந்த ராஜபக்ஷ அன்றும் தயாராக இருந்தார். இன்றும் தயாராக இருக்கிறார்” என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு ஊடாட்டத்துக்கான பூர்வாங்க முயற்சிகள் வேறு தரப்புகள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்றும் நம்பகரமாக அறியவந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *