நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் : கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் மத்திய அரசாங்கம் கையாளும் பாரபட்சப் போக்கினால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசினால் ஒதுக்கப்படவேண்டிய நிதி வழங்கப்படாமையினால் மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான பின்னடைவுகள் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வருடத்தின் அரையாண்டும் கடந்து விட்ட போதிலும் கிழக்கு மாகாண சபைக்கு இவ்வாண்டுக்கான நிதியில் ஒரு சதமேனும் வந்து சேரவில்லை.

மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய நிதி தாமதித்துக் கிடைப்பதால் பொதுமக்களே பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள்.

எனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை உரிய நேரத்தில் வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

இதேவேளை கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளின் பற்றுச் சீட்டுக்களுக்கான நிதி சமீபத்தில்தான் மத்திய அரசினால் விடுவிக்கப்பட்டன.

இந்த ஆண்டுக்குரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை விரைவில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *