​இரட்டை இலை விவகாரம்..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான விசாரணையை வரும் 23ந்தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உருவான அணிகளால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்க முயற்சித்து வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு இரட்டை இலையை மீட்க முயற்சித்து வருகிறார்.

இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பாக, கடந்த 6ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. இதற்காக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு அணியின் நிர்வாகிகளும் டிடிவி தினகரன் தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் ஆஜரானார்கள்.

மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் டிடிவி தினகரன் தரப்பினர் முதலில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். டி.டி.வி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான அஸ்வினி குமார் ஆஜரானார். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் 6 பிரமாண பத்திரங்கள் போலியானவை என்றும், அதில் உள்ள கையெழுத்துக்கள் போலியானவை என்றும் வாதிடப்பட்டது.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் 2 முறை முரண்பாடாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்றும் டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து முடக்கி வைக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரப்பட்டது.

இபிஎஸ், ஓபிஎஸ் அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என கூறுவதை ஏற்க முடியாது என நிராகரித்த தேர்தல் ஆணையம், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காதது ஏன் என்று டிடிவி தினகரன் அணியினரிடம் கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தரப்பு வாதங்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் அணி சார்பில் பதிலளிக்கப்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அனல் பறந்த விவாதங்களுக்கு பின் அடுத்தக் கட்ட விசாரணையை வரும் 23ந்தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

loading…


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *