“இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைப்பதாகவும் இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்புள்ளதா என்பதை விரிவாக ஆராய்ந்து பார்ப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த இலங்கை அரசு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச் சில தினங்களுக்குள்ளேயே அந்த வாக்குறுதியை மீறியுள்ளது.”
– இவ்வாறு யஸ்மின் சூகாவைத் தலைமைச் செயற்பாட்டாளராகக் கொண்டியங்கும் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
போர்க்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இராணுவக் கட்டளைத் தளபதிகளுள் ஒருவராகிய சவேந்திர சில்வாவுக்கு, கூட்டு அரசினால் இராணுவத் தலைமையகத்தில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு கூட்டம் நிறைவடைந்து ஒரு சில தினங்களுக்குள் அங்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து போர்க் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தின் நிர்வகிக்கும் உயர் நிலை பதவியை வழங்கி அழகு பார்த்துள்ளது. இந்த நடவடிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி தேசிய அரசின் வாக்குறுதியை நம்பிய சர்வதேச சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான அவமானம்.
குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள தளபதிகளை உயர் நிலை பதவிகள் வழங்கி அழகு பார்க்கும் தேசிய அரசு, வெளிநாடுகளுக்கு படையினரை அனுப்பும்போது அவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துவதாக வழங்கியிருக்கும் வாக்குறுதியையும் நம்ப முடியாது. இதனால் படையினரை ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகளில் இணைத்துக் கொள்வதை உடனடியாக நிறுதிக்கொள்ள வேண்டும்” – என்றுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இயங்கிய 58 ஆவது படையணியே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை உட்பட மிகவும் கொடூரமான போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் மிக முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.
போரின் பின்னர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தண்டனை கிடைப்பதைத் தடுக்கும் வகையில் தண்டனைகளிலிருந்து விலக்குப்பெறும் இராஜதந்திர பதவியொன்றை வழங்கிய அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு அவரை ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நியமித்திருந்ததையும் சூக்காவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.





