அரசின் பாதகமான நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்பதற்குப் பின்வாங்கமாட்டோம்! – அமைச்சர் ரிஷாத்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம்.”

– இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

முசலி தேசிய பாடசாலையின் மூன்று மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியமைப்பு யோசனைகள் தொடர்பில் இப்போது பெரிய பூகம்பம் ஒன்று கிளம்பியுள்ளது. மகாநாயக்க தேரர்கள் இந்த யோசனையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களைக் கண்டியில் சந்தித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகாநாயக்க தேரர்களுடன் இந்த விடயத்தில் பேசவேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றது. எல்லாமே இடியப்பச் சிக்கலாக மாறியுள்ள நிலையில் நமது சமூகமும் நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

முசலி தேசிய பாடசாலையில மூன்றுமாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலமே இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தினோம். யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கும் போது இந்தப் பிரதேசம் இருந்த நிலைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முசலி பிரதேசத்தில் பல புதிய பாடசாலைகளை உருவாக்கி இருக்கின்றோம்.

இடிந்து போன பாடசாலைக் கட்டடங்களை மாடிக் கட்டிடங்களாக மாற்றி அமைத்தோம். புல்வேறு அலுவலகங்களின் கட்டிடங்களை மீள்கட்டியெழுப்பினோம், வீடுகளை நிர்மாணித்து கொடுத்தோம். முடிந்தவரையில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவிகளை நல்கினோம். இன்னும் நல்கி வருகிறோம். ஏதிர்வரும் காலங்களில் இங்குள்ள பாடசாலைகளின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்கான பலாபலன்களை அனுபவிப்பீர்கள்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *