கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தீவிரம்; 592 பேர் பாதிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலானது தற்போது ஸ்ரீலங்காவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், கிளிநொச்சியில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளமையை மாவட்ட சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் இதன் தாக்கமானது கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ள நாள் முதல், கடந்த 03 ஆம் திகதி வரையான 67 நாட்களுக்குள் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் 592 நோயாளர்கள் இன்புளுவன்சா வைரஸ் நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.

சிகிச்சை பெற்றுள்ள 592 நோயாளர்களுள் 60 கர்ப்பவதிகள், 13 சிறுவர்கள் மற்றும் 85 பொதுமக்கள் அடங்கியுள்ளமை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது புதுவருட பண்டிகைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றுவரும் போது இந்த இன்புளுவன்சா நோய்த்தாக்கம் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக மாவட்ட சுகாதார மருத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காய்ச்சல் காரணமாக கர்ப்பவதிகள், பிரசவத்தின் பின்னரான தாய்மார், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஆஸ்துமா நோயாளர்கள் மற்றும் சயரோகநோயாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதனால், குறித்த நோயாளர்களை மிக அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே கர்ப்பவதிகள் இக்காலப்பகுதியில் அதிகசன நடமாட்டம் உள்ள இடங்கள், ஆலயங்கள், சந்தைகள், கொண்டாட்டங்கள், பேருந்து பயணங்கள், மற்றும் இந்நோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுவரை இந்தவைரஸ் காய்ச்சலால் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அனைத்தும் காய்ச்சல் ஆரம்பித்த தினத்திலிருந்து தாமதமாக, அதாவது நான்காவது அல்லது ஐந்தாவது நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிலேயே இனங்காணப்பட்டுள்ளது.

எனவே இந்த நோயின் ஆபத்து கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் குறைவடையாத காரணத்தினால், எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரசமருத்துவமனையை நாடுமாறும் விரைந்து சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரையோ தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *