சர்வதேசம் தமிழர் பக்கம்! அச்சத்தில் மைத்திரி அரசு!! – சுமந்திரன் சுட்டுக்காட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“சர்வதேச சமூகம் தமிழர்களுடன் இருப்பதைக் கண்டு மைத்திரி அரசு பயப்படுகின்றது. எனவே, சர்வதேச சமூகத்தை இன்னும் கூடுதலாக இறுக்கிக்கொண்டு நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து சர்வதேச சமூகத்தினரை அடித்து விரட்டுகின்ற அடிமுட்டாள்தனமான காரியங்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல்போனோர் விவகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் உயிரோடு இருந்தால் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் எப்படி இல்லாமல் போனார்கள்? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய பொறிமுறை என்ன? என்பதைச் சொல்ல வேண்டும்.

அரசியல் கைதிகளில் வழக்கில்லாமல் இப்போது எவரும் இல்லை. 80 தொடக்கம் 90 பேர் வரை வழக்குகளோடு இருக்கின்றனர். அவர்களில் அரைவாசிப் பேர் நீதிமன்றினால் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள். அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எஞ்சியோரின் வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

மக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து மீளப் பெறப்பட்ட வேண்டும். அவை மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த திங்கட்கிழமை இரவுகூட வலியுறுத்தியிருந்தார்.

போரின்போது நிகழ்ந்த குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 5 ஆண்டுகளாக அதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இலங்கையில் போர் முடிந்து விட்டது. உலகில் வேறு பிரதேசங்களில் போர் நடந்து கொண்டிருக்கின்றது. சர்தேச சமூகத்தின் கவனம் இலங்கையிலிருந்து திரும்பிவிடும். அதற்கு முன்னர் விடயங்கள் நடைபெற வேண்டும் என்று நாம் அங்கலாய்த்தோம்.

எந்தவொரு இறைமையுள்ள நாடும், இன்னொரு இறைமையுள்ள நாட்டின் விடயங்களில் தலையிடாது. ஆரம்பத்தில் அறிவுரைதான் சொல்வார்கள். அந்த நாட்டைப் பயன்படுத்தியே சகலதையும் செய்ய முயல்வார்கள். ஆனால், இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் அதனைச் செய்யவில்லை.

இலங்கையில் ஆட்சியாளர்களை மாற்றினால்தான் இதனைச் செய்ய முடியும் என்று சர்வதேச சமூகம் நம்பியது. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை சர்வதேச சமூகம் விரும்பியது. இது எல்லோரும் அறிந்த இரகசியம்.

நீதி வேண்டி நாங்கள் சர்வதேச சமூகத்திடம் உதவி கேட்கின்றோம். சர்வதேச சமூகம் எங்கள் முன்பாகத் தனது நிகழ்சி நிரலை வைத்திருக்கின்றது. அதற்கு நாம் இணங்கி அனுசரணை வழங்குவது அத்தியவசியமானது. எங்களுக்கு உதவ முன்வந்துள்ள சர்வதேச சமூகத்திற்கு இணை அனுசரணை வழங்குவதே புத்திசாலித்தனமானது. நாங்கள் அவர்களிடம் உதவி கேட்டுவிட்டு, நாங்கள் சொல்கின்றபடிதான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமானது.

சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கவனம் திசை திரும்பாதது எமக்கு கிடைத்த பாக்கியம். சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் ஊடாக எந்தவொரு நாடும் சிறப்படைந்தது என்பதற்கு எந்தவொரு வெற்றிக் கதையும் அதனிடம் இல்லை. இலங்கையின் ஊடாக அது சாத்தியம் ஆகும் என்று சர்வதேச சமூகம் நினைக்கின்றது. அதனால் சர்வதேச சமூகத்தின் கரிசனை, பார்வை இலங்கை மீது தொடர்ச்சியாக இருக்கின்றது.

போர் வெற்றி மமதையில் தவறு இழைத்த ராஜபக்ஷாக்கள், யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள். தமிழ் – முஸ்லிம் மக்களின் நூறு சதவீத வாக்குகளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வந்திருந்தாலும் அவரை அகற்றியிருக்க முடியாது. சிங்கள வாக்காளர்களில் 48 சதவீதத்தினர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். அதாவது சிங்கள தேசத்தை மீட்டெடுத்த மீட்பருக்கு எதிராக, அந்த வெற்றியைப் பெற்ற 5 வருடத்திலேயே அவருக்கு எதிராக வாக்களித்தனர். அதனை நாம் கண்டுகொள்ளாமல் விடமுடியாது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் நிறைவில் நாம் பொது வாக்கெடுப்புக் கோருவதை சிலர் பிழை என்கின்றார்கள். பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டிலே பொது வாக்கெடுப்பில் வெல்ல முடியுமா என்று கேட்கின்றார்கள். நியாயமான தீர்வு, நாட்டின் சுபீட்சத்துக்கான தீர்வு முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்களும் ஆதரவு வழங்குவார்கள். தமது போர் வெற்றி மீட்பரையே தூக்கி எறிந்த 48 சதவீதமான சிங்கள மக்கள், நியாயமான விடயத்துக்காக ஏன் ஆதரவு வழங்கமாட்டார்கள் ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசின் அமைச்சர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுத்தால் நாடு முன்னேறும் என்று சொன்னார். பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக நீங்கள் நிறையத் திட்டம் வைத்திருக்கின்றீர்கள். அது எனக்குத் தெரியும். முதலில் எங்களுக்கு நீதியை – நியாயமான தீர்வைத் தாருங்கள். அதன் பின்னர் இந்த நாட்டை எவராலும் பொருளாதார ரீதியில் வீழ்த்த முடியாது என்றார்.

இதைச் சொல்லி முடித்து விட்டு ஜனாதிபதி மைத்திரியைப் பார்த்து, இதனை நீங்கள் செய்யாவிட்டால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது என்றார்.

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். அது சிங்கள மக்களுக்கும் தேவை என்பதை இப்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ஆனாலும், அதனைச் செய்வதில் தயக்கம், பழைய சிந்தனை, ஏன் இதனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், கொடுக்காமல் விடலாமா என்ற இந்தச் சிந்தனை பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும்கூட இருக்கின்றது. கொடுக்கக் கூடியதைக் குறைத்துக் கொடுத்துச் சமாளித்து விடலாமா? என்று சிந்திக்கின்றார்கள். அவர்கள் அப்படிச் சிந்திப்பதில் தவறில்லை. அப்படிச் சிந்திப்பவர்களுக்குக்கூட உலக யதார்த்தம் புரிந்திருக்கின்றது.

சர்வதேச சமூகம் எங்களுடன் இருப்பதைக் கண்டு அவர்கள் பயப்படுகின்றார்கள். ஆனால், எங்களில் சிலர் இங்கே சர்வதேச சமூகம் எதுவும் செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஐ.நா. எங்களை கைவிட்டு விட்டது என்று வாய் கூசாமல் சொல்கின்றார்கள். ஐ.நா எங்களை எங்கே ஐயா கைவிட்டு விட்டது? சர்வதேச சமூகம் எங்களுடன் இருப்பதை பலர் குழப்பியடிக்க முயல்கின்றார்கள். சர்வதேச சமூகம் எங்களுடன் இருப்பதைக் கண்டு பயப்படுகின்ற அரசுக்கு, சர்வதேச சமூகத்தை எங்களிடமிருந்து விரட்டியடிக்க எங்களில் சிலர் முயல்கின்றார்கள்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *