ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக! – அரசை வலியுறுத்துகின்றது கூட்டமைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“ஐ.நா. தீர்மானங்களின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

“தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள். எனவே, அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்” என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

2015ஆம் ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி – ஏகமனதாக வியாழக்கிழமை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் புதிய தீர்மானத்தை வரவேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முகமாக 2015ஆம் ஆண்டின் 30/1 தீர்மானத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுவதனை வலியுறுத்தும் ஐ நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/L 1 தீர்மானத்தை வரவேற்கின்றது.

மேலும், இந்த 34/L 1 தீமானத்தில், இலங்கை அரசுக்கும் ஐ நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், 30/1 தீர்மானத்தின் வெற்றிகரமான அமுலாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கொடுத்துள்ள காலவரையறையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வரவேற்கிறது.

எனவே, இந்தத் தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசு வழங்கிய தனது வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் எனவும், இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் அரசை வலியுறுத்த விரும்புகின்றோம்.

மேலும், அரசானது காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரின் குடும்பங்களின் அங்கலாய்ப்புகள் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க விரும்புகின்றோம்.

தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள். எனவே, இந்த விடயங்கள் தொடர்பான அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

மேற்குறித்த விடயங்களை அடைந்து கொள்வதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்தாசைகளையும் நாம் வரவேற்கின்றோம். தமிழ் பேசும் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும், இலங்கையில் நிலைமாற்று நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் செயலாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவதிலும் கண்காணிப்பதிலும் ஆக்கபூர்வமாக செயற்படும் என்பதனையும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்தத் தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதி செய்யும்படிக்கான அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன எடுக்கவேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்” – என்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *