நானுஓயாவில் சூறாவளி 112 பேர் இடப்பெயர்வு, 21 வீடுகள் பாதிப்பு
நுவரெலியா – நானுஓயா கிளாரன்டன் மேற்பிரிவில் வீசிய மினி சூராவளி காரணமாக 112 பேர் இடம்பெயர்ந்து தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்கு இடைப்பட்ட தருணத்தில் வீசிய இந்த சூறாவளியால் 21 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
ஆனால், இதுவரையில் அனர்த்த முகாமைத்துவத்தில் இருந்து எவரும் தமது பகுதிக்கு வருகை தரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
அத்துடன், தோட்ட முகாமையாளர் யுவான் தமக்கான உதவிகள் செய்து தருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக் காலங்களாக மாலை வேளைகளில் இவ்வாறு தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
1947ஆம் ஆண்டு மண்ணால் கட்டப்பட்ட இந்த லயன் தொகுதியில் இனி இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு சுவர்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் தமது நாட்களை கழிக்க வேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமக்கான வீடுகளை அமைத்துக் கொள்ள வேறு இடங்களை தருமாறு பாதிக்கப்பட்ட நானுஓயா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையகப் பிரதேசங்களில் சூறாவளிகள் ஏற்பட்டாலும், தாழ்வான பகுதிகளில் இவ்வாறு சூறாவளியின் தாக்கம் ஏற்படுவது கவனத்திற்கொள்ள வேண்டியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





