தேர்தல் குளறுபடிகளுக்காக உள்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று அக்கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தெரசா மே மீண்டும் பிரதமராக
பதவியேற்க உள்ளார்.

கடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை வென்ற கன்சர்வேடிவ் கட்சியால், இம்முறை பெரும்பான்மை பெற முடியாமல் போனது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவுக்கு பிரதமர் தெரசா மே எடுத்த சில நடவடிக்கைகள்தான் காரணம் என அவர்கள் கருதுகின்றனர்.

கன்சர்வெட்டிவ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரான போரீஸ் ஜான்சனிடம், கட்சியின் தலைமை பொறுப்பையும், பிரதமர் பதவியையும் தெரசா மே விட்டுக்கொடுக்க வேண்டும் என ஐந்து மந்திரிகள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட இந்த சரிவுக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரசா மே, அக்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தெரசா மேயின் மன்னிப்பையடுத்து அனைத்து எம்.பி.க்களும் அமைதியடைந்துள்ளதாகவும், தெராசா மேவின் பின்னால் உறுதியாக நிற்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான பணிகளையும், டியுபி கட்சித் தலைவரிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *