ஐ.நா. அறிக்கையாளர் எமர்சன் அடிப்படை நாகரிகம் இல்லாதவர்! – சாடுகின்றார் விஜயதாஸ

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எந்வொரு இராஜதந்திர தகைமையையோ, அடிப்படை நாகரிகத்தைக் கொண்டவரோ அல்லர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஐந்து நாள் பயணமாக இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், கடந்த வெள்ளிக்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார்.

இவர் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விஜயதாஸ ராஜபக்ஷ,

“இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பல ஐ.நா. அறிக்கையாளர்கள் திறமை, மற்றும் இராஜதந்திர ஆற்றலைக் கொண்டவர்களாக இல்லை.

சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கு எந்வொரு இராஜதந்திர தகைமையோ, அடிப்படை நாகரிகமோ கிடையாது. அவர் ஓர் இராணுவத் தளபதி போலவே நடந்துகொண்டார்.

எமது சந்திப்பின்போது, கூட அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தவறான தரவுகளுடன் வந்தார். அவரது தரவுகளுக்கான மூல ஆதாரங்களை நான் கேட்டேன். தகவல் மூலங்கள் நம்பகமானது என்று மாத்திரமே அவர் கூறினார்.

நான் அவரது தரவுகளை, ஆதாரபூர்வமாக நிராகரித்தேன்.

ஐ.நா. அறிக்கையாளர் மோனிக்கா பின்டோவும் இப்படித்தான் முன்னர் இலங்கைக்கு வந்து, நிலைமைகளில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் சமர்ப்பித்த அறிக்கை, நீதித்துறையை கடுமையாக விமர்சிப்பதாக இருந்தது.

அவரும்கூட, தமிழர்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூறினார். இலங்கைக்கு இப்போது பயணம் மேற்கொள்ளும் சிறப்பு அறிக்கையாளர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

இவர்கள் போதிய திறமையற்றவர்களாகவும், மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்கள் கல்வியறிவற்றவர்கள்; மேற்குலகைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பென் எமர்சன், மோனிகா பின்டோ ஆகியோர் தொடர்பாக, எமது நாட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு மிகவிரைவில் எடுத்துக் கூறுவேன்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *