சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண்ணும் தாயகத்து சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித மண்ணும் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியத் தலைவர்; அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய மாவீரர் 2017க்கான கொள்கைவகுப்பு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.

மணியோசை, சங்கொலி, பறையொலியுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம் 18:05 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டதுடன், இளையோர்களின் இசையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் இடம்பெற்றன.

சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது.

‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *