பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக மூண்டிருக்கும் தகராறைத் தீர்த்துவைப்பதற்கு நீதித்துறை தலையிடவேண்டியது அவசியமாகும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
இது தொடர்பில் இலங்கையின் முன்னணி சிவில் சமூகத் தலைவர்களில் ஒருவரான கலாநிதி ஜெகான் பெரேராவை நிறைவேற்றுப் பணிப்பாளராகக்கொண்ட தேசிய சமாதானப் பேரவை அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது.
அந்த அறிக்கையின் விபரம் வருமாறு ;
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே புதிய எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய அண்மையில் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த அறிவிப்பை முன்னதாக எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்திருக்கிறது.
தான் கடந்த மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர பதவியில் இருந்து சபாநாயகர் தன்னை நீக்கவிலலை என்று சம்பந்தன் வாதிடுகிறார்.
இதன் காரணமாக பாராளுமன்றத்தில் இப்போது இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்ற ஒரு சூழ்நிலை தோன்றியிருக்கிறது.
அண்மையில நாட்டில் இரு பிரதமர்கள் இருந்ததாகத் தோன்றிய சூழ்நிலையை ஒத்ததாக இது அமைந்திருக்கிறது.
அரசியல் நெறிமுறை, பாரம்பரிய நடைமுறைகள், சம்பிரதாயங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை உறுதியாகக் கடைப்பிடிக்கப்படவேண்டுமென்பதில் நம்பிக்கைகொண்டவர்களினால் எதிர்க்கடசித் தலைவர் பதவி அலட்சியம் செய்யமுடியாததாகும் என்ற நிலைப்பாட்டை சமாதானப் பேரவை கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று முக்கிய அமைச்சுக்களைத் தன்வசம் வைத்திருக்கிறார்.பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுறறாடல் பாதுகாப்பு அமைச்சு ஆகியவையே அவையாகும்.
மேலதிகமாக நான்காவது அமைசாசு ஒன்றையும் அவர் பொறுப்பெடுத்திருக்கிறார்.அதாவது பொலிஸைக் கையாளுகின்ற #முன்னைய சட்டம், ஒழுங்கு அமைச்சை பாதுகாப்பு அமைச்சுடன் ஜனாதிபதி சேர்த்துவிட்டார்.
இந்த அமைச்சுக்களை தன்வசம் எடுத்துக்கொண்டதன் மூலமாக அவர் தன்னையும் சுதந்திர கட்சி/ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைகளை அரசாங்கத்திற்குள் வலிதாக்கிக்கொண்டுள்ளார்.
அமைச்சர் நியமனங்களை வீட்டோ செய்வது, விசாரணை ஆணைக்குழுக்களை நியமிப்பது மற்றும் கிராமசக்தி அபிவிருத்தித் திட்டத்துக்கான வழிகாட்டல்களை வழங்குவது உட்பட பல செயற்பாடுகளின் மூலமாக ஜனாதிபதி ஆட்சிமுறையில் தீவிரமாகப் பங்குபற்றுகிறார்.
இத்தகைய பின்புலத்தில் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டமை முரண்பாடான ஒன்றாக இருக்கிறது.
எதிரர்க்கட்சி தலைவர் பதவி சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்படமுடியுமா அல்லது வழங்கப்படவேண்டுமா என்ற சட்டரீதியான கேள்வியொன்று எழுகிறது.
அரசியல் சமுதாயத்தில் உள்ள பலரைப் பொறுத்தவரை ஆட்சிமுறை என்ற சிந்தனை சட்டத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதும் தாங்கள் நினைப்பதன் பிரகாரம் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் தான் என்றாகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைத் தாங்கள் பெறவில்லை என்று ராஜபக்சவும் ஏனைய சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவிக்கும் மறுப்பில் இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
நவம்பர் 9 ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைப்பதாக வெளியிட்ட வர்த்தமானிப் பிரகடனத்தை அடுத்து அவர்கள் எல்லோரும் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றுக்கொண்டதை தொலைக்காட்சிகள் ஔிபரப்பின.
பாராளுமன்றக் கலைப்பை அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் பிறகு தீர்ப்பளித்தது.
வாய்மூல அறிக்கைகள் சட்டரீதியாக கட்சிகளுக்கிடையிலான உடன்பாடுகளுக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தங்களது அறிக்கைகளின் பிரகாரம் நடக்கவேண்டிய கடப்பாடு தலைவர்களுக்கு இருக்கிறது.அத்தகைய அறிக்கைகளுக்காக அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரமுடியும் அல்லது அவர்களைப் பொறுப்பாளிகளாக்க முடியும்.
அதனால் இந்த முரண்நிலையில் உள்ள சட்டரீதியான அம்சத்தை ஆராய்வதற்கும் அதைத் தீர்த்துவைப்பதற்கும் நீதித்துறையை நாடவேண்டியது அவசியம் என்று தேசிய சமாதானப்பேரவை கருதுகிறது.
ஆட்சிமுறையில் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் பொதுவில் அரசியல்வாதிகளும் குறிப்பாக அரசியல் தலைவர்களும் அவர்களது செயற்பாடுகளுக்காகவும் தெரிவிக்கும் கருத்துகளுக்காகவும் பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டும்.
எமது அரசியல் சமுதாயத்திலே ஜனநாயக ரீதியிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே நிறுவன ரீதியான சாதனமாக நீதித்துறையே இருப்பது போன்று தெரிகிறது.
அதை உறுதிப்படுத்தத்தவறுவது புதுவருட உதயத்தில் உறுதிப்பாடு கொண்ட அரசாங்கத்தைக்கொண்டிருக்க விருமபுகிற இலங்கையர்கள் சகலரினதும் அபிலாசைகளை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.





