ஜெனிவாவில் இலங்கை தண்டிக்கப்படுவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்! – ஸ்டாலின் வலியுறுத்து
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தண்டிக்கப்படுவதை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஆனால், இந்த விசாரணையைத் தாமதப்படுத்தும் வகையில் இரண்டு வருட கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இலங்கை அரசுக்குச் சாதகமாக அமெரிக்காவும், பிரிட்டனும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வருகின்றன.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக இந்திய மத்திய அரசு உறுதியாக இருந்து, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தண்டிக்கப்படுவதை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன், மோடி உறுதியான தலைவர் என்றால் இலங்கைக்குச் சார்பான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







