“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.”
– இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார்.
இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்தார். இதன்போதே குரு முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் தீர்வுக்கு எமது தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. பௌத்த தேரர்களின் எதிர்ப்பை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே சரிசெய்ய வேண்டும். அதேநேரம் ஜனாதிபதியுடன் பேசி தீர்வு காண வேண்டியதும் உங்களின் பொறுப்பு.
தற்போதைய ஜனாதிபதியும் உங்களின் கட்சியில் இருந்தே அரசியல் செய்தார். இவற்றின் அடிப்படையில் நீங்களே பேசி ஓர் இணக்கத்தைக் காணவேண்டும் . இவையே நாட்டுக்கும் நன்மை பயக்கும் . அதேவேளை, காணாமல்போனோர் விடயம் ஒரு பெரும் தீராத பிரச்சினையாகவே தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதற்கும் தீர்வு எட்டவேண்டும்” என்று நல்லை ஆதின குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் பஸில் ராஜபக்ஷ நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.