தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9 மணியளவில் யாழ். நகர் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் ஆரம்பமானது.

போராட்டக்காரர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை வீதி வழியாகப் பேரணியாகச் சென்று மீண்டும் பஸ் தரிப்பிடத்துக்கு வந்து பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உடனே பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டடத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர், சிவில் அமைப்பினர், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலரும் பங்கேற்றனர்.

நண்பகல் 12 மணியளவில் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

தமது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உடனடியாகத் தீர்வு காணப்படாத பட்சத்தில் வடக்குக்கு ஜனாதிபதி வர முடியாதவாறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் இன்று முற்பகல் 10 மணிக்கு வவுனியா மத்திய பஸ் நிலையம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தை சிவில் சமூகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *