* ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்* மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; மீட்புப் பணியும் தொடர்கிறது
* பாடசாலைகளுக்கு விடுமுறை; அரச ஊழியரின் விடுமுறை இரத்து
* ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; பல இடங்களில் வெள்ளம்
* அவசர நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு
அடைமழையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் படையினரின் உதவியோடு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதற்காக விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு உயிரிழப்புகளும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரத்தினபுரி, காலி, கேகாலை,களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடர்ந்தும் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அனர்த்த வலயங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
சீரற்ற காலநிலையால் 48 மணிநேரத்துக்குள் இலங்கையில் 80 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
அரச பரீட்சைகள் ஒத்திவைப்பு;
பாடசாலைகளுக்குப் பூட்டு
அரச முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சைகள் சனியும் (27) ஞாயிறும் (28) நடைபெறவிருந்தது.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு;
அரச ஊழியரின் விடுமுறை இரத்து
நாடாளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது. முற்பகல் 10.30 மணிக்கு சபை கூடியது. எனினும், நாட்டில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும் சபை அமர்வுகளை ஒத்திவைக்குமாறு பொது எதிரணியும், ஜே.வி.பியும் கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்வதற்காக 11.45 மணியளவில் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியது. இதன்போது பிற்பகல் 2 மணியுடன் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடையும் என பிரதி சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதேவேளை, சீரற்றகால நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களின் விடுமுறைகள் மறுஅறிவித்தல்வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தேவையேற்படும் பட்சத்தில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களையும் சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று (26) பிற்பகல் அங்கிருந்து தனது டுவிட்டர் தளத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தார்.
அவசர அனர்த்த நிலைமைகளைக் கேள்வியுற்றுத் தான் மிகுந்த கவலைடைகின்றார் என்றும், அனர்த்தத்தை எதிர்நோக்கிய பொதுமக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், “அவசர நிலைமைகளை எதிர்கொள்ளவும், தேசங்களைக் குறைக்கவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியுள்ளேன். தேவையான நிதி ஒதுக்கீட்டினை ஒதுக்குமாறு நிதி அமைச்சருக்குக் கூறியுள்ளேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் பல பாகங்களிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் நிலைமை மோசமாக இருப்பதால் பயணங்களின்போது விழிப்பாக இருக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் இக்காலப்பகுதியில் அதிகரித்துக் காணப்படும் என்பதால மீன்பிடி நடவடிக்கைக்கு செல்ல முன்னர் வளிமண்டளவியல் திணைக்களமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விடுக்கும் பணிப்புரைகளை கேட்டுச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த நிலைவர அறிக்கையின்படி,
உயிரிழப்பு – 100
காணாமல்போனவர்கள் – 101





