ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – தொடரை 2-1 இந்தியா அசத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 137 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்த 106 ரன்களை 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.கேப்டன் ரஹானே 38 ரன்களும், லோகேஷ் ராகுல் 51 ரன்களும் எடுத்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழத்துச் சென்றனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *