பிரபாகரனோ இல்லை; காணாமல்போனோரை யாரிடம் போய் கேட்பது? – கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. அப்படியானால் காணாமல்போனவர்களை யாரிடம் போய் கேட்பது?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் ஆகியன அந்தக் காலத்தில் இங்கே இருந்தன. இந்தப் பகுதியிலிருந்த பிள்ளைகள் காணாமல்போயுள்ளனர். இந்த வேலையை அனைவரும் செய்துள்ளனர்.

ஒரு பகுதியினரிடம் மட்டும் கேட்க முடியாது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை எடுத்துப் பாருங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்றதாகச் சிலர் சொல்கின்றனர்.

இந்திய அமைதிப் படை கொண்டு சென்றதாகச் சொல்லியிருக்கின்றனர். சிலர் வேறு அமைப்புக்கள் தங்களது பிள்ளைகளைக் கொண்டு சென்றதாகக் கூறியிருக்கின்றனர். அதேநேரம் அரசு பிடித்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இராணுவத்தில் இருந்தவர்களும் காணாமல்போயுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. கிட்டு ல்லை. சூசை இல்லை. யாரிடம் போய்க் கேட்க முடியும். கேட்கவும் முடியாது. ஒன்றும் செய்யவும் முடியாது.

இந்த அரசு பொய் சொல்லவில்லை. உண்மைதான் சொல்ல முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கம்தான் அரசுக்கு இருக்கின்றது. இதனால்தான் காணாமல்போனோருக்கான சான்றிதழ் கொடுக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமது பிள்ளைகள் எங்காவது இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால், எங்கே இருக்கின்றார்கள் என்று யாருக்கும் சொல்ல முடியாது” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *