இலங்கையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கியுள்ளன.
ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இருந்தோரும் இலங்கைக்கு சுற்றுலா வந்தோரும் என சுமார் 321 பேர் வரை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
இன்று தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், கொழும்பில் கட்டிடங்களில் வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டதோடு, காலை 8.30 முதல் மூன்று நிமிட மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது.
சுமார் 110 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் 20 சவப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டு இரங்கல் ஆராதனை துவங்கியது.
ஏராளமானோர் அடக்கம் பண்ணப்பட வேண்டியுள்ளதால், அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஆராதனை நிகழ்த்த இயலாத சூழல் உள்ளது என்றார் கொழும்பு துணை பிஷப்பான அந்தோணி ஜெயக்கொடி.
சில நூறு மீட்டர்கள் தொலைவில், தேவாலயத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட இடம் ஒன்று, ஏராளமானோரை அடக்கம் செய்யும் கல்லறையாக மாற்றப்பட்டுள்ளது.
அவர்கள் ஒரே இடத்தில் உயிரிழந்தார்கள், அதனால் அவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்வதுதானே முறையாக இருக்கும் என்கிறார் அருட்தந்தை Sanjeev Senananya.
தெருக்களில் வெள்ளுடை தரித்து மக்கள் நடமாட, ஒரு இடத்தில் இரண்டு வீடுகள் இருந்தால், அவற்றில் ஒரு வீட்டில் இன்று இறுதி சடங்குகள் நடக்கின்றன என்கிறார் அமந்தா என்னும் உள்ளூர் ஆசிரியை.





