தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்! வடக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கிறது பேராதரவு!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பில் மைத்திரி ரணில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பராமுகத்துடன் இருந்துவருகின்றது என்று கைதிகளின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

உண்ணாவிரதக் கைதிகள் தமது கோரிக்கையில் உறுதியாக உள்ளனர் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு கோரியும் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இந்தக் ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பேராதரவு வலுத்துள்ளது.

ஹர்த்தாலன்று காலை 9.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *