சுற்று நிருபங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குக! – ஜனாதிபதி பணிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திடீர் அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை அரசால் நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குறித்த நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் உரிய தகவல்களின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை முற்பகல் களுத்துறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்குதல், இடம்பெயர்ந்து மற்றும் அன்றாட தொழில்களை இழந்துள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான ஒரு முறைமை குறித்து தொடர்புடைய நிறுவனங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் அவ்வப்போது ஏற்படும் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

சுற்று நிருபங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாத்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தொடர்ச்சியாக வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அனர்த்தத்திற்குள்ளான பிரதேசங்ளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில் முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *