தொடர்கிறது போராட்டம்: 10 இலட்சம் அஞ்சல்கள் தேக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் சுமார் 10 இலட்சம் அஞ்சல்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கின்றது.

நிர்வாக ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டம் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக, முதலாம் வருடத்திற்கான பாடசாலை விண்ணப்பங்களை அனுப்பும் நடவடிக்கை மற்றும் பல்கலைக்கழக நுழைவுக்கான செயன்முறைகள் நடைபெற்று வரும் இக் காலகட்டத்தில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள இப் போராட்டம் காரணமாக பெற்றோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முதலாம் தரத்திற்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதோடு, தபாலில் அனுப்பாமல் நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை கையளிக்க முடியுமென கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற் காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை மற்றும் ஊழியர் சட்டமூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், குறித்த தபாற் காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு மாற்றும் செய்தியில் உண்மையில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *