தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களை நியமித்திருப்பது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்பவாகும்.
எனவே அந்த அனைத்து நியமனங்களும் சட்டபூர்வமானது என்பதுடன், அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.
நாட்டில் எத்தகைய அரசியல் நிலைமைகள் ஏற்பட்டாலும் தமது அமைச்சுக்களின் நடவடிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றி, நாட்டின் அனைத்து துறைகளையும் உரிய முறையில் பேணுவது அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சர் விமல் வீரவங்ச, வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிமல் கொடவலகெதர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





