எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்காக கூட்டமைப்பிடத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் வரவு–செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அதனை சாதகமாக பார்ப்பதாக ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுபடவேண்டிய நிலைமைகள் உள்ளன. அதனடிப்படையில் எமது தரப்பின் கருத்துக்களையும் வரவு –செலவுத்திட்டத் தயாரிப்பின் போது கோரியிருந்தார்கள். அச்சமயத்தில் நாம் எமது மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியும், நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியும் கருத்துக்களை முன்வைத்திருந்தோம். அந்த விடயங்கள் இந்த வரவு –செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான வீடுகள், விதவைப் பெண்களுக்கான தேவைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை கருத்திற்கொண்டு முதலீடுகள் போன்ற விடயங்கள் நிதி அமைச்சரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேநேரம் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினை இயங்கச் செய்வதற்காக 1300 மில்லியன் ரூபா ஒதுக்கபட்டுள்ளது. இவ்வாறு தற்போது நாம் அவதானித்த வகையில் எமது கருத்துக்கள் கூடியளவு உள்வாங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாம் இந்த வரவு –செலவுத்திட்டத்தினை சாதகமாகவே பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், வரவு –செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சாதகமாகவுள்ளன. எனினும் நாம் ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது. சொல்லப்பட்ட விடயங்கள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.





