டெனீஸ்வரனைப் பதவி நீக்க ரெலோவோ, வடக்கு முதல்வரோ என்னுடன் ஆலோசிக்கவில்லை! – சம்பந்தன் தெரிவிப்பு 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவிநீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான  தங்கள் அமைச்சரவையிலுள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறும், புதியவரது பெயரைத் தமது கட்சி பிரேரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவிநீக்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் முன்னெடுத்துள்ள நிலையில், கட்சித் தலைவர் என்ற ரீதியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா என்று இரா.சம்பந்தனிடம் வினவியபோது, இது தொடர்பில் ரெலோ அமைப்போ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும், தற்போதைய நிலையில் இதற்கு என்னால் பதில் கூறமுடியாது எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *