மஹிந்தவின் உறவினர்கள் மைத்திரியுடன் இரகசியம்! – அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் என்கிறார் எஸ்.பி.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியமாகப் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.”

– இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இதனால் அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மஹிந்தவுக்கு உண்மையில் மக்கள் செல்வாக்கு உண்டு. ஆனால், அவரால் வெல்ல முடியாது. ஸ்ரீமாவின் காலத்திலும் இவ்வாறுதான் ஸ்ரீமாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக எட்டுத் தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார்.

ஆனால், அவர் கட்சியை விட்டுக் கொடுக்காமல் பிடித்துக் கொண்டதால் பின்னர் 1994 இல் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. 1994 இல் பெற்ற அந்த வெற்றிதான் மஹிந்த இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற உதவியது.

மஹிந்தவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ள போதிலும் அவருக்கென்று ஒரு கட்சி இல்லாததால் அவரால் வெல்ல முடியாது.வெல்ல முடியாதவர்களின் பின்னால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லமாட்டார்கள். அவரது தலைமையிலான மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வர் என்று அவர்கள் சொல்வது மக்களைக் குழப்புவதற்காகத்தான்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் வந்து இணைவதற்காக மஹிந்த அணியின் பலர் எம்முடன் பேச்சு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அதைவிடவும் முக்கியமானது என்னவென்றால் மஹிந்தவின் நெருங்கிய உறவினர்களே எம்முடன் இணைவதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்திக்கொண்டிருப்பதுதான். அரசியல் அரங்கில் விரைவில் பல மாற்றங்கள் ஏற்படும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *