மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – மஹிந்த அணி திட்டவட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“மீதொட்டமுல்ல குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அரசே பொறுப்புகூற வேண்டும். அனர்த்தம் என்ற போர்வைக்குள் இதனைத் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.”

– இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குப்பைமேடு சரிந்து விழுந்து அதிகளவானோர் உயிரிழந்த சம்பவம் இலங்கையிலேயே பதிவாகியுள்ளது. இந்த அனர்த்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 இற்கும் அதிகமாகியுள்ளதுடன் அதிகளவிலானோர் இந்தக் குப்பைமேட்டில் புதையுண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இட்மபெற்றதுடன் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் சடலங்களை உரியமுறையில் நல்லடக்கம் செய்யவேண்டும் எனவும், பாதிக்ப்பட்ட தரப்புக்கு நியாயமான நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் பொது எதிரணி என்ற வகையில் கேட்டுக்கொண்டிருந்தோம்.

அண்மையில் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவவீரர்களால் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினரின் குடும்பத்துக்கு 20இலட்சம் வழங்கவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொலன்னாவை மீதொட்டமுல்லப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு அரசு அவசரமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கத் திட்டமிட்டிருப்பது வெட்கத்துக்குரிய விடயமாகும்.

பாதிக்கப்பட்ட தரப்பின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி பின்னர் நியாயமான நட்டஈட்டை அம்மக்களுக்கு வழங்க வேண்டும்.

கொலன்னாவை – மீதொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்கு அதிகளவிலான பொறுப்பு அரசுக்கே உள்ளது. அனர்த்தம் என்ற போர்வைக்குள் இந்த அரசு இப்பிரச்சினையை மறைத்துவிட முடியாது. இங்கு கொட்டப்படவேண்டிய குப்பை தொடர்பில் காணப்பட்ட சட்டங்களை மீறி கொழும்பு மாநகர சபை செயற்பட்டுள்ளது. அசமந்தப்போக்கே இந்தப் பாரிய அனர்த்தத்துக்கு காரணமாக அமையலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு உடன் தீர்வுகாணும் அரசு குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *