போர்க்குற்றங்களோ, மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று யாழ்பாணத்தில் வைத்து தான் தெரிவித்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்.
1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே தமிழ் மக்களுக்காகத் தான் குரல் கொடுத்து வருகின்றார் என்றும், தனது நிலைப்பாடு என்னவென்பது தமிழ் மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன், “ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழ் மக்களையும், எங்களையும் அரசு நடு வீதிக்கு கொண்டுவந்துவிட்டது. குறிப்பாக அண்மையில் வடக்கு வந்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னகூட ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.
போரில் போர்க்குற்றங்களோ, மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை. எனவே, விசாரணை அவசியமில்லை என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். அவர் முற்போக்கு சிந்தனையுடைய இடதுசாரி அரசியல்வாதி. அவர் போன்றவர்களை நம்பித்தான் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், அவரே இப்படிப் பேசுகின்றார்” என்று குறிப்பிட்டார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,
“நான் கூறிய தகவல்களை ஊடகங்கள் தவறாகப் பிரசுரித்துள்ளன. இவரும் தவறாக விளங்கி வைத்துள்ளார். நான் உரையாற்றும்போது மாவை சேனாதிராஜா எம்.பி. அங்கிருந்தார். உறுப்பினர் கூறுவதுபோல் நான் எதையும் சொல்லவில்லை.
எனது நிலைப்பாடு என்னவென்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே நான் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றேன்.உங்களுக்கு (சிவசக்தி ஆனந்தன்) முன்பிருந்தே தமிழ் மக்களுக்காக நான் பேசி வருகின்றேன். எனவே, இனியும் தவறான அர்த்தப்படுத்தலுடன் – தவறான தகவல்களை மேற்கோள்காட்டிப் பேச வேண்டாம்” – என்றார்.





