வடக்குப் போராட்டங்களுக்கு உரிய தீர்வைத் தரவேண்டும்! – மைத்திரியிடம் விக்கி நேரில் வலியுறுத்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்புப் போராட்டம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் எடுத்துக்கூறியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதியை மைத்திரிபாலவை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி செயலத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-

காணாமல்போனவர்கள்

காணாமல்போனவர்களின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் 42 நாட்களாகவும், வவுனியாவில் 38 நாட்களாகவும், முல்லைத்தீவில் 26 நாட்களாகவும், வடமராட்சியில் 19 நாட்களாகவும், திருகோணமலையில் 29 நாட்களாகவும் நடைபெற்று வருகின்றது. இவர்களில் பலரும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் நோயாளிகள். வெய்யிலிலும் குளிரிலும் இரவு பகலாக தற்காலிகக் கொட்டகைகளில் இருந்தவாறு போராடுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்து விட்டார்களா என அறிய விரும்புகின்றார்கள்.

பிரதமர் உட்பட பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். காணாமல்போனவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று பிரதமர் தெரிவிக்கின்றார். ஆனால், அவர்கள் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை ஆதாரமாகக் காட்டி அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக தேர்தல் காலத்தில் எடுத்த படம் ஒன்றில் தங்களுக்கு முன்னால் இடது பக்கத்தில் தனது மகள் இருப்பதாக ஒரு தாய் காட்டுகின்றார். அவருடைய பெயர் செல்வி.ஜெயவதனா. இன்னும் இருவர் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்களைக் கண்டுபிடிப்பது தங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. இதுபோல பல சான்றுகள் கைவசம் வைத்திருக்கின்றார்கள். எனவே, குறைந்தளவுக்கு இவர்களுக்காக பின்வருவனவற்றையாவது தங்களால் செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

* காணாமல்போனோர் தொடர்பான ‘பரணகம’ அறிக்கையை இதுவரை வெளியிடாவிட்டால் வெளியிடல்.
* காணாமல்போனவர்களில் பத்திரிகைகளில் இனங்காட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைக்கு உத்தரவிடல்.
* நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தாது இதுவரை தடுத்துவைக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிடல்.
* தமது அன்புக்குரியவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் அதன்பின்பு காணாமல் செய்யப்படக்கூடும் என்ற பயம் உறவினர்களிடம் உண்டு. அதனைத் தாங்கள் கண்காணிப்பீர்கள் என நம்புகின்றேன்.
* காணாமல்போனவர்களுக்கான அலுவலகத்தை உடன் இயங்கச் செய்தல்.
* காணாமல்போனோர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பு பொருத்தமான சான்றிதழ்களை வழங்கல்.

காணிகளை
விடுவித்தல்

போரின் பின் எட்டு வருடங்களாகியும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினருடைய பிரசன்னம் இனியும் தேவையற்றபடியால் அவர்கள் வசமுள்ள காணிகளை விடுவிக்கலாம். புலனாய்வு வேலைகளைப் பொலிஸார் மேற்கொள்ள முடியும். மிகுதியாக மயிலிட்டியிலுள்ள போர்த் தளபாடங்களை முன்னர் ஒருமுறை செய்தது போல் அழிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இவை தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

* இராணுவதினர் வசமுள்ள காணிகளின் விவரங்களை வெளியிடல்.
* மக்கள் செறிந்து வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றல். சிங்கள மக்களின் இடங்களில் அவர்களை வைத்திருப்பின் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அவர்களின் உறவினர்கள். ஆனால், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன.
* கூகிள் வரைபடங்கள் மூலம் காட்டுப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக அறிய வருகின்றது. பெறுமதிமிக்க மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளன. எங்களுடைய வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
* பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் இராணுவ முகாம்கள் அருகில் இருப்பதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

வேலையற்ற
பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

* வடக்கு, கிழக்கிலுள்ள மத்திய மற்றும் மாகாண அரச வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
* பொலிஸாரின் ஏஎஸ்பி தரத்தில் நியமனங்களை விரும்புகின்ற பட்டதாரிகளுக்கு அந்தப் பதவிகளை வழங்க உதவுதல்.
* இதேபோன்று வேறு அரச நிறுவனங்களிலும் வேலைகள் வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
* தனியார் துறையில் பொருத்தமான வேலைகளை வழங்கல்.
* சுற்றுலாத்துறையில் இவர்களுக்கு வேலைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

இவை யாவற்றையும் தங்கள் கவனிப்புக்குக் கொண்டு வரும் அதேநேரம் விரைவில் அவர்கள் சார்பாக நல்ல நடவடிக்கைகளை எடுக்க முன்வருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *