ஆடி மாத ராசிபலன் – மிதுனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

18.08.2019 முதல் 17.09.2019

மிதுனம்: தைரிய ஸ்தானத்தின் வலிமையுடனும் ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் துணையுடன் இந்த மாதத்தில் செயற்கரிய செயல்களைச் செய்து சுற்றியுள்ளவர்களை பிரமிப்பிற்குள்ளாக்குவீர்கள். மற்றவர்கள் அசந்துபோகும் விதத்தில் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்களது கௌரவம் உயர்வடையும். சுற்றி நடக்கும் பிரச்னைகளில் தலையிட்டு சுமுக தீர்வு காண முற்படுவீர்கள். இந்த மாதத்தில் வரவு நிலை கூடினாலும், ஆடம்பர செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு.

ஆலயத் திருப்பணி, அன்னதானம் முதலிய சேவைகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். நண்பர்களால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். ஆயினும் எதைப்பற்றியும் கவலைப்படாது சதா முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றும் முயற்சி வெற்றி பெறும். செப்டம்பர் 10ம் தேதிக்குப் பிறகு அனுகூலம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். சதா ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பதால் உடல்நிலையில் களைப்பான சூழலை உணர நேரிடலாம். கலைத்துறையினருக்கு தொழில்முறையில் அலைச்சல் அதிகரிக்கக் கூடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடலாம். மற்றபடி மனதில் மகிழ்ச்சி நிலவி வரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : செப்டம்பர் 9, 10, 11.
பரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டு வாருங்கள்.

இன்றைய ராசிபலன் 19.08.2019
இன்றைய ராசிபலன்