மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார்.

1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். உதயநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களுக்காக பணியாற்றினார். அவர்களிடையே தன்னுதவி குழுக்களை ஏற்படுத்தி தற்சார்பு பொருளாதாரத்தை நம்பி வாழ வழி செய்தார்.

இதனால் அவர்களிடம் செல்வாக்கு குறைந்ததாக கருதிய அப்பகுதி செல்வந்தர்கள் ஆத்திரம் அடைந்தனர். ராணி மரியாவை கொலை செய்ய சமந்தார் சிங் என்பவரை ஏற்பாடு செய்தனர். 1995-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி, இந்தூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்த கன்னியாஸ்திரி ராணி மரியா மீது சமந்தார் சிங் கொலைவெறி தாக்குதல் நடத்தினான்.

54 முறை கத்தியால் குத்தி துடிக்க துடிக்க அவரை கொலை செய்தான். அவர், ‘ஏசுவே’ என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்த படி உயிர் நீத்தார்.

இந்த கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்ற சமந்தார் சிங்கை, கன்னியாஸ்திரியின் குடும்பத்தினர் பலமுறை சிறையில் சந்தித்து மன்னிப்பு வழங்கினார். கவர்னரையும் சந்தித்து சமந்தார் சிங்குக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

11 ஆண்டுகள் சிறையில் இருந்த சமந்தார்சிங், தன்னை செல்வந்தர்கள் கொலை செய்யத் தூண்டியதாக தெரிவித்தார். பின்னர் கிறிஸ்தவராக மாறிய சமந்தார் சிங், கன்னியாஸ்திரி ராணி மரியாவின் வழியில் ஏழைகளுக்கு உதவி செய்வதில் தமது வாழ்நாட்களை செலவிட இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் கன்னியாஸ்திரி ராணி மரியாவை புனிதராக உயர்த்துவதற்கான பணிகளை இந்தூர் மறை மாவட்டம் தொடங்கியது. 2003 செப்டம்பர் 26-ந் தேதி வாடிகன் அவருக்கு இறையடியார் பட்டம் வழங்கியது.

கிறிஸ்தவ மதிப்பீடுகள் அடிப்படையில் வீரத்துவ வாழ்வு வாழ்ந்ததற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் நேற்று போப் பிரான்சிஸிடம் ஒப்படைக்கப்பட்டன.

கன்னியாஸ்திரியின் மறைசாட்சிய வாழ்வை ஏற்றுக்கொண்ட போப் ஆண்டவர், அவருக்கு அருளாளர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார். இந்த ஆண்டு போப் பிரான்சிஸ் இந்தியாவுக்கு வரும்போது, கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு அருளாளர் பட்டம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *