வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் சங்கம் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் இணைந்துள்ளனர்.