அம்பாந்தோட்டை முதலீட்டை தாமதிக்க சீனா தீர்மானம்
சட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்புடையவர்களை ஆதாரம் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பெரியளவில் கடனாளியாகியுள்ள ஸ்ரீலங்காவிற்கு நிதி தேவைப்படுவதாகவும், எனினும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் நலன்களுக்கான கொடுப்பனவு சில வாரங்கள், அல்லது மாதங்களுக்கு தாமதிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் சீன அரசின் மேர்ச்சர்ன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனத்துடன் ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்து, ஜனவரி 7ஆம் திகதிக்குள் துறைமுகத்தின் 80 வீத பங்குகளை வாங்குவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்தப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்க கொழும்புடன் சீனா இணங்கியிருந்ததோடு, இதுபற்றிய உடன்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்பியிருந்தது.
எனினும் கைத்தொழில் வலயத்துக்கு காணிகளை விற்பதாக கூறி, உள்ளூரில் போராட்டங்கள் எழுந்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு, அவர் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலய திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உடன்பாட்டைச் செய்து கொள்ளலாம் எனவும், உள்நாட்டு விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரையில் இதனை நிறுத்தி வைப்பதென்னும் சீனா தீர்மானித்துள்ளது.
துறைமுகத்தை ஆரம்பிக்கும் போது, காணியும் தேவை எனவும் சீனா கோரியுள்ளது, எனினும் அதற்கான சீனா நிபந்தனை விதிக்கவில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த இரண்டு உடன்பாடுகளும் தொடர்புடையவை என்று ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் கூறியுள்ளார்.
கைத்தொழில் வலயம் இல்லாமல் துறைமுகத்தை வைத்திருந்து என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இரண்டுமே தேவை எனவும் கூறியுள்ளார்.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அபிவிருத்திப் பணிகளுக்காக விவசாய நிலங்கள் ஒருபோதும் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மக்களின் அனுமதியுடனேயே அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் நேற்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக சுஜாதா ஜயவர்தன நினைவுப் பேருரை நிகழ்வில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
“நேற்றைய தினம் நான் ஹம்பாந்தோட்டை சர்வதேச கேட்போர் கூடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்தேன். இதன்போது காணிகள் பெற்றுக்கொள்ளப்படும் போது மக்களின் அனுமதியின்றி அது முன்னெடுக்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தேன். விவசாய நிலங்களை நாம் ஒருபோதும் பெற்றுக்கொள்ளமாட்டோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரும் மே மாதம் பீஜிங் பயணம் மேற்கொள்ளும் வரை காத்திருக்க சீனா முடிவு செய்திருப்பதாக, சீனத் தரப்புடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுகுறித்து சீன வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க மறுத்து விட்டது.
இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலையத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை இந்த திட்டம் தாமதிக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீனத் தூதுவர், ஆமாம், நாம் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறோம். நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனா தாமதிக்க எடுத்துள்ள முடிவினால் ஸ்ரீலங்கா பொருளாதார ரீதியாக பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.