காலநிலை மாற்றத்தின் விளைவாக ஆக்டிக் கடலில் இருந்து, இந்து சமுத்திரம் வரை புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
வெறும் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல, பவன வெப்பம் அதிகரித்து வருதல் மற்றும் துருவப் பனிமலைகள் உருகுதல் என்பன பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லனவாக உருவாகியிருக்கின்றன.
வளி மண்டல வெப்பம் உயர்தல், தவிர மண்ணையும் கடலோரங்களையும் வெகுவாகப் பாதித்து பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
இவ்வகைப் பாதிப்புகளில் கடலோரங்களில் கொட்டப்படும் கழிவுகள் பெரும் பங்களிப்புச் செய்வதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. கடலில் சேரும் நச்சு மாசுகளை மீன்கள் உணவாக உட்கொண்டு இறுதியில் மனித சமூகத்தை வந்தடைகின்றன.
வளி மண்டல வெப்ப உயர்வினால் துருவப் பனிமலைகள் உருகி பனித் தட்டுகளிடையே சிறைப்பட்டுக் கிடக்க நச்சுப் பதார்த்தங்கள் விடுவிக்கப்பட்டு கடல் நீரை வந்தடைந்து மாசடையச் செய்கின்றன.
சமீபத்திய ஆய்வின்படி பனி தட்டுகளிடையே சிறைப்படுத்தப்பட்டு கிடந்த மாசுகள் குறிப்பாக கொடிய விஷமாகிய பாதரசம் விடுபட்டு கடலை வந்தடைந்து மீன்களுக்கு உணவாகின்றன. மேலும் இவ்வாறு மீனை உண்ணும் மனிதன் நஞ்சூட்டப்படுகின்றான்.
எவ்வாறாயினும் இப்பிரச்சினை சமகாலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தொடரும் சாத்தியம் தென்படுகின்றது. ஒவ்வொரு முறையும் வளிமண்டல வெப்பம் அதிகரிக்கும் வேளை, பனித்தகடுகள் உருகி மாசுகள் விடுவிக்கப்பட்டு, கடல் நீரை வந்தடையும் சாத்தியம் காணப்படுகிறது.
முதன் முதலாக பாதரச நஞ்சினால் ஏற்பட்ட பேரிடர் ஜப்பானில் 20 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘மீன்மற்றா’ குடா நாட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் கழிவுப் பொருளாக மீதைல்மேர்க்குரி குடா நீரில் சேர்க்கப்பட்டது.
அதன் விளைவாக அந்தக் குடாநாட்டு கிராமங்களிலுள்ள மக்கள் குறிப்பாக மீனவ சமூகம் பெரும் பாதிப்படைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டதுடன் பலர் மரணத்தை தழுவிக் கொண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ‘குளோப்ரீற்றி’ என்னும் நிறுவனம் 140 நாடுகளைச் சேர்ந்த சூழல் நிபுணர்களை ஒன்று கூட்டி கடல் நீரில் பாதரசம் கலப்பதையிட்டு விவாதித்து, அதைக் கட்டுப்படுத்தும் வழி வகைகளை வெளியிட்டனர்.
பற்றறிக் கழிவுகள், உடைந்த உஷ்ணமானிகள், வாசனைத் திரவிய வெற்றுப் போத்தல்கள், மற்றும் பாதரசம் உள்ள கழிவுகளைக் கடலில் அகற்றுவதை தடை செய்தனர். மேலும் புதிய பாதரசம் அகழ்வது தடை செய்யப்பட்டது.
தற்போது சக்திப் பிறப்பாக்கத்தில் நிலக்கரி எரிக்கப்படுவதாலும், வாகனப் புகைகளாலும் சிறிய அளவில் அகழ்தல் நடவடிக்கைகளாலும் மற்றும் பல்வேறு வழிகளிலும் வளி மண்டலம் மாசடைகின்றது. 1970 இல் வளிமண்டல மாசுகள் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து வளிமண்டல மாசுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுப்பிக்கத் தக்க வளங்களாகிய நீர் வீழ்ச்சி மின் பிறப்பாக்கம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்றவற்றை உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் காலநிலை மாற்றம் பெரிதும் கட்டுப்பாட்டினுள் வந்ததாகத் தெரியவில்லை.
நாடுகளிடையே உள்ள வெப்ப வித்தியாசத்தால் கடலில் சுழியோட்டங்கள் ஏற்பட்டு கடல் மாசுகள் பல இடங்களுக்கும் பரவிச் சென்றதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக கரையோரச் சமூகம் பெரும் அனர்த்தத்தை எதிர்க் கொண்டிருக்கிறது.
‘ஸ்டாங்’ என்னும் சீன ஆய்வாளர் இமாலய உச்சியில் பனி மாதிரிகளைச் சேகரித்து மற்றும் குவாஹி ஆற்றிலுள்ள மீன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்விற்கு உட்படுத்திப் பார்த்ததில், அவற்றில் பாதரச நச்சு அதிகளவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். பனிப்படலங்களில் அடைபட்டுக்கிடந்த மாசுகள், பாதரசம் உட்பட விடுபட்டு இமாலய நதிகளை வந்து சேர்கின்றன.
இன்னுமொரு ஆய்வில் காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிக மழைவீழ்ச்சி ஏற்பட்டு தரை வழியோடி நதிகளில் சேரும் நீர் சேதன மாசுகள் சென்று பிளாங்டன் தாவாரங்களில் செறிவடைகின்றன. இத்தாவரத்தை மீன்கள் உண்ணும் போது நச்சுப் பதார்த்தம் மீன்களைச் சென்றடைகின்றன. மேலும் செந்நிறமான பெருவெள்ளம் கடலை அடையும் போது, மேற்பரப்பு செந்நிறமடைந்து, சூரிய ஒளியை ஆழ்கடலுக்குள் செல்லவிடாது தடை செய்கின்றது.
ஆழ்கடலில் உள்ள தாவரங்கள் சூரிய ஒளி கிடைக்காது மடிந்துபோக, அங்கு பக்டீறியா பெருக்கமடைந்து நச்சப் பதார்த்தங்கள் சேர்கின்றன. அதை மீன்கள் உணவாக உட்கொண்டு நச்சுத் தன்மையுடையதாக மாறுகின்றன.
கடல் மேற்பரப்பிலுள்ள வெப்ப ஏற்றத் தாழ்வினால், கடல் நீரில் பெரும் சுழியோட்டங்கள் ஏற்பட்டு, அதன் விளைவாக கடல் மாசுகள் எல்லா இடங்களுக்கும் பரவலாக கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது நாங்கள் நான்கு வெவ்வேறு வகையான ஆய்வுகளை மேற் கொண்டு எவ்வாறு சேதனப்பொருட்கள் குறிப்பிட்ட இடங்களில் சேர்கின்றன என ஆராய்ந்தோம். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய முற்பட்டுள்ளோம் என்கிறார் சூழலிய நிபுணர் பயோன்.
மேலும் இவ் ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நீர்நிலைகளில் கழிவுப் பொருட்கள் அகற்றுவதை யிட்டு புதிய சட்ட வரைவுகளைச் சிபார்சு செய்வோம் இவ்வகை சட்டத்திட்டங்களால் நீர் நிலைகளில் மாசுகள் கட்டுப்படுத்தப்படுவதுமட்டு மல்லாது மீன்களில் நச்சுப் பதார்த்தங்கள் செறிவடைவது தடுக்கப்படும் என்கிறார் பயோன்.
உலகம் பூராகவும் வறிய மக்களின் தினசரி உணவாகிய மீனில் நச்சுப் பதார்த்தங்கள் சேர விடாது தடுப்பது எம் எல்லோரினதும் கடமையல்லவா?





