முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு வேண்டுமென்றால், முஸ்லிம் மக்களுக்கென சமஷ்டிக் கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்னர், முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டினை எட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் தமிழ்ப் பேசும் மக்களுடைய அபிலாஷைகளை மற்றும் நியாயமான, நீதியான உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்றும் அதனைப்பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு ஏதுவாக முஸ்லிம் தலைமைகளும் தமிழ்த் தலைமைகளும் கட்சி பேதங்களை மறந்து ஓர் இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் எஸ். வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவின் அடிப்படையிலேயே, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தருணத்தை பயன்படுத்தி மக்களின் நியாயபூர்வமான உரிகைளைப் பெற்றுக்கொடுக்க தமிழ்ப் பேசும் சமூகங்களின் தலைமைகள் விரைவாக முன்வர வேண்மென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று அரசாங்கமும் கால இழுத்தடிப்புச் செய்யாமல் இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள், முஸ்லிம் மக்கள் அரபு நாடுகளுக்கும் தமிழ் மக்கள் இந்தியாவிற்கும் செல்லுமாறு கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு இந்த தேசம் எவ்வளவு உரித்துடையதோ, அதேபோன்று தமிழ்ப் பேசும் மக்களுக்கும் சொந்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்றும் கடந்த அரசாங்கம் மதவாத அமைப்புக்களுடன் சேர்ந்து செயற்பட்டதனால் தான் ஆட்சி தூக்கி வீசப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.