அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் – முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு பதிலடியாக அ.தி.மு.க. தலைமை கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெருவாரியான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் சூழல் உருவாகும். எனக்கு ஆதரவு தெரிவிக்க எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின மனசாட்சிப்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் செயல்படுவார்கள் என நம்புகிறேன். யாருடன் இருக்கவேண்டும், யாருடன் இருக்கக்கூடாது என ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த மருத்துவர்களின் பதிலில் மக்களுக்கு திருப்தி இல்லை. எனவே, உண்மை தெரியவேண்டும் என்பதற்காக விசாரணைக் கமிஷன் பற்றி கூறினேன். மக்களின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் எனது பணி இருக்கும்.
ஜெயலலிதா என் மீது தனிப்பாசம் கொண்டவர். அதன் காரணமாக என்னை முதல்வராக ஆக்கினார். ஒருமுறை என்னிடம் பேசும்போது, நீங்களாவது விசுவாசமாக இருங்கள் என அவர் கூறியபோது எனக்கு கண்ணீர் வந்தது. கட்சிக்கு நான் 200 சதவீதம் விசுவாசமாக இருந்தேன். தற்போது, கட்சியில் விரிசல் உருவாக நான் காரணம் இல்லை. முதல்வர் பதவி பற்றி பேசி அமைச்சர்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை.
சசிகலா பதவியேற்புக்கு தாமதம் ஆவது பற்றி ஆளுநர்தான் பதில் தரவேண்டும். தற்போதைய சூழ்நிலையில், மும்பை சென்று ஆளுநரை சந்திக்கும் திட்டம் இல்லை. அவர் சென்னை வந்தால் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.