சில்லறை விடயங்களுக்காக பிளவடைந்து விட முடியாது. சுரேஷுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு தயாராகவே உள்ளேன். இவ்விடயம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருக் கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியானது ஏதேச்சதிகாரமாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையில் அக்கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என கூட்டமைப்பின் ஸ்தாபக பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை, மற்றும் அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனுக்கு புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக நடைபெற்று வரும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கான நேரம் மறுக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது அவற்றுக்குப்பதிலளிகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நான்கு கட்சிகளைக்கொண்ட ஜனநாயக் கட்டமைப்பாகும். அதில் பங்குபற்றியுள்ள கட்சிகள் வெவ்வேறு பட்ட விடயங்களில் வெவ்வேறுபட்ட கருத்துக்களை நிலைப்பாடுகளை கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக தமிழரசுக்கட்சி தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்பாக தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க முடியும்.
அது எவ்வாறு இருந்தாலும் கூட்டமைப்பாகவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்டுகின்றன. அந்த வகையில் சுரேஸ் பிரேமசந்திரன் சில கருத்துக்களை வௌியிட்டுள்ளார். நாம் சில்லறை விடயங்களுக்காக பிளவடைந்து விடமுடியாது. பிரிந்து நிற்கமுடியாது. தற்போது ஒரு முக்கியமான தருணம். இதில் எமக்குள் முரண்பட்டு நிற்க முடியாது. கூட்டமைப்பி்ன் தலைவர் என்ற வகையில் நான் சுரேஷ் பிரேமசந்திரனுடன் இணைந்து பயணிப்பதை மறுக்கவில்லை. அவருடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், ஒருங்கிணைந்த பயணத்திற்கும் தயாராகவே உள்ளேன்.
அதில் எனக்கு எந்தப்பிரச்சினையும் கிடையாது. இந்த விடயத்தில் கலந்துரையாடல்களை செய்வதற்கும் நான் பின்னிற்கவில்லை. இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதுகுறித்த அறிவிப்புக்கள் விரைவில் வௌியாகும். ஏனைய கட்சிகளுடனும் பேசவுள்ளேன்.
எனது தனிப்பட்ட முடிவு அல்ல
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தௌிவுபடுத்தும் இரு நாள் கருத்தரங்கு ஒன்றை நாங்கள் பாராளுமன்றக் குழுவின் அங்கத்தவர்களுக்காக நடத்தினோம். இதில் சட்டத்துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்து இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பான உறுப்பினர்களுக்கு காணப்பட்ட சந்தேகங்கள், தற்போதுள்ள அரசியலமைப்பில் காணப்படுகின்ற விடயங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் எவை, தீமைகள் எவை, புதிய அரசியமைப்புக்கான இறுதி வரைவொன்று தயாரிக்கப்படுகின்றபோது எவ்வாறான விடயங்கள் மேலும் மேம்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்பதற்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி வருகை தந்திருக்கவில்லை.
மேற்படி கருத்தரங்கின் இறுதியில் பாராளுமன்றக் குழுவின் அங்கத்தவர்கள் அனைவரும் ஏகோபித்து இக்கருத்தரங்கில் பங்கேற்கதவர்களை இடைக்கால அறிக்கை மீதான விவாத்தில் உரையாற்றுவதற்கு இடமளிப்பதில்லை என்ற முடிவினை எட்டினார்கள். அது எனது தனிப்பட்ட முடிவல்ல. அந்த முடிவின் பிரகாரம் தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை நாம் அரசியலமைப்புச் சபைத் தலைவர் கரு ஜயசூரியவின் செயலாளரிடத்தில் எனது செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
ஆதரவாக பேசுமாறு வலியுறுத்தவில்லை
மேலும் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக பேச வேண்டும் என்று நாம் யாரையும் வலியுறுத்தவில்லை. அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை. அனைவரும் தமது நிலைபாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தான் கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கான பூரண வௌி இருந்தது. கருத்துச் சுதந்திரங்களை நாம் மட்டுப்படுத்தவில்லை.
புதிய அரசியலமைப்புக்கான பணிகள் இடைவௌியில் இருக்கின்றன. அவற்றை மேலும் முன்னெடுத்து சரியான திசையொன்றில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களும் அமைந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டேன். இருப்பினும் உறுப்பினர்கள் பலர் தமது நிலைப்பாடுகளை வௌிப்படையாகவே அரசியலமைப்பு சபையில் முன்வைத்திருந்தார்கள். அதற்கு யாரும் தடைகளை விதிக்கவில்லை. அவ்வாறிருக்கையில் பாராளுமன்றக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்க அமைய எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே அந்த உறுப்பினருக்கான சந்தர்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே நான் மீண்டும் கூறுகின்றேன் அது தனிப்பட்ட ஒருவரின் முடிவல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.





