“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும்கூட, அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியேயாகும்.”
– இவ்வாறு பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
14 தரப்புக்கள் இணைந்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
“எமது போராட்டங்களே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபை ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டு வரும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், எந்தவொரு சாதகமான பதிலும் அரச தரப்பால் வழங்கப்படவில்லை. ஜனாதிபதியுடனான சந்திப்பும் திருப்தியாக அமையவில்லை என்று அந்தச் சந்திப்புக்களில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி கடந்த காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியிருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதியினதும், அரசினதும் நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது, தொடர்ச்சியான போராட்டங்களும் அதனூடாக ஏற்படுத்தப்படும் அழுத்தமும்தான் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவர்களைச் சிந்திக்க வைக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்திவைப்புப் பிரேரணையுடன் நின்றுவிடாது, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தோ அல்லது வேறு காத்திரமான போராட்டங்களின் ஊடாகவோ அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் வேண்டி நிற்கின்றோம். தவறும் பட்சத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படும்” – என்றுள்ளது.