“மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான்.”
– இவ்வாறு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் நேரில் ஒப்புக்கொண்
டார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இரண்டு வாரகால உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப், நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்குச் சென்று முத்தரப்பு சந்திப்புக்களை நடத்தினார்.
முதலாவது சந்திப்பை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன எம்.பி., ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரிடம் நடத்தினார். இதன்போது இடைக்கால அறிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
இரண்டாவது சந்திப்பை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தினார்.
மூன்றாவது சந்திப்பை சபாநாயகருடன் நடத்தினார். இந்தச் சந்திப்பில் சபாபநாயகர் கரு ஜயசூரியவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்தும், பயங்கரவாதச் தடைச் சட்டமும் அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பிலும் சபாநாயகருடன் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ பேச்சு நடத்தினார்.
அத்துடன் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடினார்.
“மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய நிலையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். எனினும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது” என்று ஐ.நாவின் விசேட அறிக்கையாளரிடம் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
சர்வதேசத்தும் நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசின் பிரதான கடமை என்றும், அதிலிருந்து அரசு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்றும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.