Sunday , December 22 2024
Home / முக்கிய செய்திகள் / உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்!

உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்களது உறவுகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

உண்ணாவிரதக் கைதிகள் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேற்று மாலை உறவுகள் பார்வையிட்டனர்.

கைதிகளைக் கண்டவுடன் அவர்களது உறவுகள் கதறி அழுதனர். கைதிகளும் விம்மி விம்மி அழுதனர்.

வவுனியா மேல்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து கடந்த மாதம் 25ஆம் திகதியிலிருந்து இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை வடக்கில் பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு கடந்த சனிக்கிழமை சென்றிருந்தபோதும் இதே கோரிக்கையை முன்வைத்து அவருக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.

அதனையடுத்து வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோ அமைப்பின் கொள்கைப்பரப்புச் செயலர் கணேஷ் வேலாயுதம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் உறவினர்கள் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை நேற்றுமுன்தினம் மாலை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அந்தப் பேச்சின்போது அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் உறவினர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட ஆளுநரால் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அதன்பிரகாரம் உண்ணாவிரதக் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் நேற்று மாலை அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றனர். இதன்போது உண்ணாவிரதக் கைதிகளைப் பார்வையிட உறவினர்கள் மூவருக்கு மட்டுமே சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

அதற்கிணங்க உண்ணாவிரதக் கைதிகளான சுலக்ஷன், தர்ஷன் ஆகியோரின் தாய்மாரும், திருவருளின் மனைவியும் அவர்களைப் பார்வையிட்டனர்.

loading…


Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv