தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு தமிழ் மொழிமூலமான மாணவரும் இடம்பெறவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ்மொழிமூலமான முதலிடத்தை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமாரும், கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திரராஜாவும் 194 புள்ளிகளைப் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிரிசான் குமார் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். கம்பகா கனேமுல்ல வெளிபில்லேவ வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்துமினி ஜயரத்ன 197 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கடவத்தை கிரிலவெல ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தருல் சகஸ் தர்மரத்ன 196 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். 195 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை 12 மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக மீள் மதிப்பீடு செய்யவிரும்புவோர் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்படவேண்டும்.
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான வேறு விடயங்களை பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்துடன் அல்லது 0112784208, 0112784537, 0113188350, 0113140314 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.