வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டம் வழங்கப்படுவதில் காட்டப்படும் பாரபட்சம், காணி பெமிர்ட் பெற்றுக் கொள்வதில் உள்ள தடங்கல்கள் குறித்துத் தெரிவித்துள்ளனர். இவற்றைத் தீர்த்து வைப்பதற்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மலையக மக்களுக்கு தேர்தலின்போது சரியான பிரதிநித்துவம் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ ஆகியவை, தமது கட்சிக்கு மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மலையக மக்கள் சார்ந்த பிரதிநிதிகளைத் தேர்தலில் நிறுத்துகின்றார்கள். மலையக மக்களுக்கு பிரதிநித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் நிறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் தேர்தல்களின்போது மலையக மக்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதிநித்துவம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜ், இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *