இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரின் கீழ் செயற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உடனடியாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் விழிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து அரசாங்கம் நாடகமாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவருக்கும், போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் சந்தேகம் காணப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.