புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புதிய அரசமைப்புக்கான வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, “தேர்தலை நடத்துவதற்கு முன்னர் புதிய அரசமைப்புமீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் உள்நோக்கமாக இருக்கின்றது. இதை மையப்படுத்தியே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமானால் அரசின் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நாம் தயாராகவேண்டும்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போதிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். சிவில் அமைப்புகளை உள்ளடக்கி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கவேண்டும். மக்கள் மத்தியில் வழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவேண்டும்” என்று கூட்டு எதிரணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் தலைவர்கள் மஹிந்தவிடம் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்தே மேற்படி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசுக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.