காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த கட்டிடத்தின் வழியாக காரை வேகமாக ஓட்டி வந்த ஒரு தீவிரவாதி அங்கிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதினான்.

அதன் பின்னர் பாராளுமன்ற நுழைவு வாயிலை நோக்கி கத்தியுடன் ஓடிவந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை குத்தினான். அவனை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர வேறு தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் பாராளுமன்றம் முன்பு மக்கள் கூட்டத்துக்குள் காரை ஏற்றி தாக்குதல் நடத்தியவன் காலித் மசூத் (52) என அடையாளம் தெரிந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதலின்போது காயம் அடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற பாராளுமன்ற எம்.பி.யும் பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியுமான டோபியாஸ் எல்வுட் என்பவர் போராடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக வெளியாகி பீதியை ஏற்படுத்தின.

ரத்தம் தோய்ந்த முகத்துடன் அவர் தோற்றமளித்த கோரக் காட்சிகள் தீவிரவாத தாக்குதலின்போது சம்பவ இடத்தில் ஏற்படும் பரபரப்பை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. யாரோ ஒரு போலீஸ் அதிகாரி தானே..,? அவர் இருந்தால் என்ன?, இறந்தால் என்ன? என்று கருதி தனது உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் சம்பவ இடத்தை விட்டு ஓடி விடாமல் தனது சமூகக் கடமையை மனிதநேயத்துடன் சரிவர நிறைவேற்றிய வெளியுறவுத்துறை மந்திரி டோபியாஸ் எல்வுட்-க்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும், புகழாரங்களும் குவிந்தன.

இந்நிலையில், இங்கிலாந்து அரசி எலிசபத் தலைமையில் பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை கூறும் உயர்மட்ட கமிட்டியின் ஆலோசகர் பொறுப்பில் டோபியாஸ் எல்வுட்-ஐ நியமித்து இங்கிலாந்து ராணி எலிசபத் தற்போது உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற தாக்குதலின்போது திறம்பட செயலாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி பென் வாலஸ் என்பவருக்கும் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்தப் பொறுப்பில் மூத்த அரசியல்வாதிகள், கிறிஸ்தவ தேவாலய தலைமை பிஷப்புகள் ஆகியவர்களை நியமிப்பதுதான் அந்நாட்டு அரச குடும்பத்தின் மரபாக இருந்து வருவது, குறிப்பிட்டத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *