வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. எனினும், அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளது.

முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து (Terminal High Altitude Area Defence (THAAD) system) என்ற ஏவுகணை எதிர்ப்பு கவன் ஒன்றை அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.

இதற்கிடையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக நேற்று ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இந்த நோக்கத்தில் அடுத்தடுத்து பரிசோதிக்கப்பட்ட நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானுக்கு சொந்தமான கடல் பகுதியில் விழுந்தது.

இதுதொடர்பாக, வடகொரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் வெளியிட்டசெய்திக்குறிப்பில், ‘அதிபர் கிம் ஜாங் உன்-னின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நமது ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. இதையடுத்து, ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை தொடருமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் (THAAD system) என்ற அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு கவன் நிறுவும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க அமெரிக்கா தீர்மானித்தது.

இதுதொடர்பாக, பசிபிக் பெருங்கடல் நாடுகளுக்கான அமெரிக்க ராணுவ தளபதி ஹாரி ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவை சீண்டிப் பார்த்து, சண்டைக்கு அழைக்கும் வட கொரியாவின் எரிச்சலூட்டும் செயல்கள் எல்லாம், இந்த எதிர்ப்பு கவன் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில் தென் கொரியாவில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு கவன் நிறுவும் பணிகளை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவின் இந்த தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு கவனால் தங்கள் நாட்டு ஏவுகணைகளை பரிசோதிக்கும் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதிவரும் சீன அரசு முன்னர் தனது கருத்தை அமெரிக்காவிடம் பதிவு செய்திருந்தது.

ஆனால், இதைப்பற்றி கவலைப்படாத அமெரிக்கா தனக்கு சவால் விடும் வட கொரியாவுக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில் வட கொரியா அருகே உள்ள தனது நட்பு நாடான தென் கொரியாவுக்குட்பட்ட பகுதியில் ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த கவனுக்கான பாகங்களை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் இருந்து ராணுவ சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கான பாகங்கள் தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓசான் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை வந்தடைந்தது.

இன்னும் ஒருசில நாட்களில் இந்த கவன் நிர்மாணிக்கப்படும். அதன் பின்னர் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தனது கிடுக்கிப்பிடி நடவடிக்கையின் மூலம் ‘செக்’ வைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *