பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் டாக்காவில் சுட்டுக் கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வங்கதேசம் நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய ஜமாத் உல் முஜாகிதீன் பங்ளாதேஷ் (ஜே.எம்.பி) என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

டாக்கா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் பல இடங்களில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை வேட்டையாட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டாக்காவில் இருந்து 250 கிலோ மீட்ட தொலைவில் உள்ள சியால்கோட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் மீது போலீசார் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஜே.எம்.பி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளில் மூசா என்பவர் அந்தக் குழுவின் தலைவர் எனவும், அந்த பெண் அவரது மனைவி எனவும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் சகோதரர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தற்கொலைப் படையை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும் எனக் கூறியுள்ள போலீசார் ,சம்பவ இடத்தில் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *